Tuesday 7 February 2012

வரலாற்றில் கிறிஸ்தவம்


பிரெடரிக் எங்கெல்ஸ்

முகம்
20/37,13-வது தெரு,
அய்யர் மனைப் பிரிவு,
சிங்காநல்லூர்,
கோவை 5.

தொலைபேசி: 0422-2593938

மின்னஞ்சல்: mugambooks@gmail.com

விலை: ரூ.65/-

நூல் அறிமுகம்

மதம் மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தின் கருவியாகவும், மக்களுடைய அவலக்குரலின் வெளிப்பாடாகவும் இருப்பதால், சமூக மாற்றத்துக்குப் போராடுபவர்கள் மதத்தின் சமூகச் செயல்பாட்டை அறிதலின் இன்றியமையாமை சரியாகவே வலியுத்துகிறது இந்நூலின் பதிப்புரை. இதனோடு மதம் குறித்த ஆய்வில் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் அறிய முயற்சிப்பவருககு மிகவும் பயனுள்ளதாக இந்நூல் அமைந்துள்ளது.

அறிமுகவுரையில் க.காமராசன் "மதம் மக்களுக்கு ஓர் அபினி" என்ற மார்க்சிய தொடரைப் பற்றிய இருவிதமான புரிதலை முதலிலேயே தெரிவிக்கிறார். ஒன்று சமூக பொருளாதார விடுதலைக்கு மத ஒழிப்பே முதன்மையானது என்ற தவறு, மற்றது மத மூடநம்பிக்கைகள் பற்றி மௌனம் சாதித்தும் இணங்கியும் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டுமே முன்நிறுத்துவது. இந்த இரண்டு போக்குகளையும் தமிழகத்தில் காணமுடிகிறது. குறிப்பாக இடதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இரண்டாம் போக்கு கோலோச்சுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே அறிமுகவுரையில் "மதம் பற்றிய மார்க்சிய வரலாற்று ஆய்வுமுறை தமிழில் நன்கு அறிமுகம் செய்யப்படவில்லை, போதுமான அளவுக்கு ஆய்வுகளும் நடைபெறவில்லை" என்பதை சுட்டிக்காட்டுகிறது. அண்மையில் செந்தழல் வெளியீடான "மதத்தைப் பற்றி மார்க்சியம்" என்ற எனது நூல் வெளிவந்துள்ளது. தமிழில் நன்கு அறிமுகம் செய்யப்படவில்லை என்ற குறையை ஓரளவுக்கு போக்கும் என நம்புகிறேன்.

எங்கெல்சின் இந்நூல் சரியான தருணத்தில் வந்துள்ளதாகவே கருதுகிறேன். ஏன் என்றால் மதம் பற்றிய மார்க்சிய அணுகுமுறையில் அலசிப்பாக்க துடிக்கும் இளைஞர்களை அண்மையில் அதிகம் சந்தித்து வருகிறேன். அப்படிப்பட்டவர்களுக்கு எங்கெல்சின் இக் கட்டுரைகள் பெரிதும் பயன்படும்.

"மதம் பற்றி" என்ற மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் படைப்புகள் தமிழில் 1963 ல் தொ.மு.சி.ரகுநாதன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு என்.சி.பி.எச். நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலி வந்து பல ஆண்டுகள் சென்றுவிட்டன. அதன் மொழியாக்கமும் பழைய கலைச்சொற்களை கொண்டிருககிறது. அதிலிருந்து எடுக்கப்பட்ட இந்நூலில் இடம் பெறும் மூன்று கட்டுரைகளும் இன்றைய தமிழ் நிலைக்கு நன்றாக மாற்றப்பட்டுள்ளது. மார்க்சிய முதலாசிரியர்களின் இந்த முழு நூலையும் முகம் வெளியீட்டகம் இதே மொழிவடிவத்தில் கொண்டு வந்தால் வாசகர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

1.புரூனோ பௌவரும் பழைய கிறிஸ்தவமும், 2.பழைய கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றி. 3.பின்இடைக்கால ஜெர்மனியில் திருசசபை சீர்த்திருத்தமும் திருச்சபை எதிர்ப்பும் என்ற எங்கெல்சின் மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரை மதத்தின் தோதற்றத்தையும் தொடக்கத்தையும் விவரிக்கிறது. முதல் கட்டுரையில் எங்கெல்ஸ் "கிறிஸ்தவம் உள்ளிட்ட எல்லா மதங்களும் ஏமாற்றுக்காரர்களின் படைப்பு என்ற நோக்கே இடைக்காலத்தின் சுதந்திரச் சிந்தனையாளர்கள் தொடங்கி, பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவொளிச் சிந்தனையாளர்கள் வரை எல்ரோரிடமும் ஆதிக்கம் செலுத்தியது. இந்த நோக்கு,உலக வரலாற்றில் பகுத்தளிவுப் பூர்வமான படிமலர்ச்சியைக் காணும் பணி தத்துவதினுடையது என்று கூறிய ஹெகலுக்குப் பிறகு அவ்வளவாகப் போதுமானதில்லை என்று உணரப்பட்டது."(பக்கம்25) "தமக்கு ஒரு மதம் தேவை என்று தாமே உணரும் மக்களாலும், வெகுமக்களின் மதத் தேவையைப் பற்றிய உணர்வைப் பெற்றவர்களாலுமே மதங்கள் நிறுவப்படுகின்றன." (பக்கம்25) என்று மதத்தின் தோற்றம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மதத்தின் வர்க்கத் தன்மையை பற்றியும், கம்யூனிஸ்ட் கட்சியின் மதத்தின் மீதான அணுகுமுறையைப் பற்றியும் அறிந்துகொள்வதற்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் முழுப்படைப்பும் படித்தறிதல் என்பது தேவையான ஒன்றாகும். இல்லை என்றால் இந்நூலில் இடம் பெற்றுள்ள சிலபகுதிகளை தவறாக புரிந்து கொண்டு விடுதலை இறையியல் என்ற போக்கிற்குள் வீழ்ந்துவிட நேரும் அபாயம் இருக்கிறது.

"பழைய கிறிஸ்தவத்தின் வரலாறு நவீனகாலத் தொழிலாளி வர்க்க இயக்த்தோடு குறிப்பிடத்தக்க ஒற்றுமை அம்சங்களைக் கொண்டிருக்கிறது. தொழிலாளி வர்க்க இயக்கம் போன்று, கிறிஸ்தவமும் தோற்றக் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கமாகவே இருந்தது,..".(பக்கம்25) இதுபோன்ற பகுதிகளை மட்டும் பிடித்துக் கொண்டே மார்க்சியத்துககு எதிராக புரிந்து கொள்ளவும். அதனைப் பரப்பவும் தொடங்கிவிடுகின்றனர் நம்மவர்கள். அதனால் மார்க்சிய முதலாசிரியர்களின் முழுகருத்துத் தொகுப்பான அந்நூலை முழுவதும் இன்றைய மொழிநடைக்கு மாற்றப்பட்டு வெளியிடுவது இன்றியமையானதாகும்.